பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
“என் தந்தை விடயத்தில் கொழும்பு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தன்னிச்சையானது என்று உயர்நீதிமன்றம் இன்றைய தினம் (17-01-2024) அறிவித்துள்ளது.
மேலும், குறித்த தீர்மானம் சட்டத்துக்குப் புறம்பானது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து ஹிருணிகா பிரேமச்சந்திர கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
“இது தனிமனித வெற்றியல்ல, முழு நாட்டின் வெற்றி, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கோட்டாபய ராஜபக்ஷவின் முட்டாள்தனமான தீர்மானத்தை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமன்னிப்பு அதிகாரத்தை எதிர்கால ஜனாதிபதிகள் துஷ்பிரயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறந்த எடுத்துக்காட்டு” எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்தார்.