இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்து இருக்கும் நிலையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கத்தார் நாட்டின் முன்முயற்சியில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பிணைக் கைதிகள் பரிமாற்றம் நேற்று மாலை நடைபெற்றது.
இதில், ஹமாஸ் படை வாக்குறுதி அளித்தது போல் 12 தாய்லாந்து நாட்டவர்கள், 13 இஸ்ரேல் நாட்டவர்கள் என 25 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளனர்.
அதே சமயம் பதிலுக்கு இஸ்ரேலிய சிறையில் தவித்து வரும் 39 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. இவர்களில் 24 பேர் பெண்கள் மற்றும் 15 பேர் டீன் ஏஜ் வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் சிறையில் தவித்து வந்த பாலஸ்தீன கைதிகள் பிணைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டு இருப்பதை பாலஸ்தீனர்கள் ஆனந்த கண்ணீர் விட்டு கொண்டாடினர்.
இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துள்ளனர். சாலைகளில் கூடிய ஆயிரக்கணக்கானோர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தவர்களை உற்சாகமாக வாணவேடிக்கையுடன் வரவேற்றனர்.
அத்துடன் இளைஞர்களை தோளில் தூக்கி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டத்தின் போது பலர் தங்கள் கையில் பாலஸ்தீன கொடி மற்றும் ஹமாஸ் கொடியை ஏந்தி இருந்தனர்.
ஹமாஸ் 250 பிணைக் கைதிகளை விடுவிக்கும் போது, இஸ்ரேல் சிறையில் இருந்து சுமார் ஆயிரம் பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.