அனுராதபுரத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் பாகங்கள், யுவதியின் பெற்றோரால் தானம் செய்யப்பட்டுள்ளன.
சம்பவத்தில் அனுராதபுரம், சியம்பலகஸ்வெவ, ரம்பேவ, பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உபேக்ஷா சந்தமாலி எனும் யுவதியே நேற்று முன்தினம் (25) உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம் என்பன தானமாக வழங்கப்பட்டுள்ளன. உயிரிழந்த யுவதி பிரபலமான சுப்பர் மார்க்கெட் ஒன்றின் அனுராதபுர கிளையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த எட்டாம் திகதி ரம்பேவ மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசை கச்சேரியை பார்த்துவிட்டு, மறுநாள் காலை வீடு திரும்பும் போது, கெப் வண்டியில் விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த யுவதி, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இவரது தந்தை தனது மகளின் இறுதி விருப்பத்திற்கமைய அவரது உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மகள் உயிரிழந்த துக்கத்திலும் தம் மகளின் கடைசி ஆசையை பெற்றோர் நிறைவேற்ரி உள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.