இலங்கை அரசாங்கம், மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றப் புலனாய்வுத்துறையினரை பயன்படுத்தி அரசாங்கம், சமூக ஆர்வலர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் கருத்துக்களை நசுக்க முயல்வதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய, சட்டத்தரணி சுனில் வட்டகல, அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், விமர்சனங்கள் எழுந்துள்ளமையை அடுத்தே அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக வட்டகல குற்றம் சுமத்தினார்.
அடக்குமுறையை கொண்டு பேச்சுரிமை நசுக்கப்படுவது, ஜனநாயக விழுமியங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டமை, சமூக ஆர்வலர் செஹான் மாலிக கைது செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் சமுத்தித்த சமரவிக்கிரமவின் வீடு தாக்கப்பட்டமை என்பன, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களுக்காக இலக்குவைக்கப்பட்ட சம்பவங்களாகும் என்று வட்டகல குறிப்பிட்டார்.
பேச்சு சுதந்திரம் இலங்கையின் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சமூக ஆர்வலர் செஹான் மாலிக கைதுசெய்யப்பட்டதன் மூலம் வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் ஆரம்பித்துள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனில் வட்டகல தெரிவித்தார்