எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி கலவரம் வெடிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகிப்பதாகவும் இதனால், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அந்த கட்சி ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில், மீண்டும் கலவரமான சூழ்நிலை ஒன்று எதிர்வரும் 9 ஓகஸ்ட் மாதம் நடைபெறாது இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக தெரியவருகிறது.
அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக திகதியையும் நேரத்தையும் ஒதுக்கி தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) மற்றும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaska) ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இலங்கையில் மீண்டும் போராட்டமான நிலைமை ஏற்படும் என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் ஏதேனும் ஒரு வகையில் அப்படியான நிலைமை ஏற்பட்டால், தற்போது அமைதியாக காணப்படும் நாட்டில் மீண்டும் ஸ்திரமற்ற நிலைமையேற்படும் எனவும் பொதுஜன பெரமுன கருதுகிறது.
இதனால், அதனை தடுப்பதற்காக ஜனாதிபதியுடன் இந்த பேச்சுவார்த்தையை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தவிர நாட்டின் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, மக்களுக்கு தேவையான அத்தியவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொடுப்பது, பசளை விநியோகம், எரிபொருள் விநியோகம், சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் மருந்து விநியோகம் என்பன குறித்தும் பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.