மருந்துத் தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் வெளியான இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மருந்துத் தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியா உதவியை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ட்விட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக்கூடிய உதவிகள் குறித்து ஆராயுமாறு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் வழமையான சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மீளப்பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மருத்துவ வழங்கல் பிரிவினால், மருந்து பொருட்கள் வழங்குவதை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை வைத்தியசாலையில் வழமையாக அனைத்து சத்திரசிகிச்சைகளையும் இடை நிறுத்துவதாக வைத்தியசாலை நிர்வாகம் வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்வுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே தற்போது இடம்பெற்று வருவதாக பேராதனை வைத்தியசாலை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.