களுத்துறை, பயாகல பிரதேசத்தில் பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை மூன்று தடவைகள் தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் பதறவைத்துள்ளது.
28 வயதுடைய சந்தேகநபரான தாய் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 9ஆம் திகதி நாகொட போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இளைய மகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பயாகல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் சந்தேகம்
பிள்ளைக்குப் பெயர் சூட்டுவதற்காக பெற்றோர் இருவரும் கடந்த 15ஆம் திகதி ஜோதிடர் ஒருவரைச் சந்தித்து வீடு திரும்பிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்றைய தினம் பிற்பகல் சிசு படுக்கையில் இருந்து விழுந்து விட்டதாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் சிசு உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையில் சிசு படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.
இதை அடுத்து சிசுவின் தாயை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை தாய் மூன்று தடவைகள் சிசுவின் மூக்கை அழுத்தியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போதே அவர்களுக்கு முதல் முறையாக குழந்தைகள் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கைதான தாயார் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.