காத்தான்குடி அல்ஹிரா வித்தியாலயத்தில் 1998 ஒரு பரிசளிப்பு விழா நடந்தது. 10 பாடங்களில், 8 பாடங்களுக்கான பரிசுகளையும் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வரும் போது மனசெல்லாம் நிறைந்திருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகமது நிஹாஜ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் அகமது நிஹாஜ் வாழ்க்கையில் அனுபவித்த இன்னல்களும், சாதனைகளும்
6ம் ஆண்டிலிருந்துதான் படிக்க தொடங்கியிருந்தேன். 5ம் ஆண்டு வரை, 10ம் ஆளுக்குள் வருவதையே கனவாக கொண்டிருந்த நான், 6ம் ஆண்டிலிருந்து 11ம் ஆண்டு வரை, எல்லாத் தவணைகளிலும் முதலாவதாகவே வந்தேன்.
இத்தனைக்கும் குடும்ப சூழ்நிலை துரத்திக் கொண்டே இருந்தது. ஒழுங்கான உடுப்பு இல்லாத, சப்பாத்து இல்லாத, டியூட்டரியில் காசு வாங்க நிற்கும் போது, “வந்துட்டான்டி …….” என்டு சிரிக்கப்பட்ட நிலைகள்.
5 ரூபா காசில்லாமல், ஆங்கிலப் பாட கிளாசில் இருந்த துரத்தப்பட்ட நிலை.
யாரோ செய்த தவறுக்கு, நீதான்டா செய்திருப்பாய் என முழு கிளாசின் முன்னும் கன்னத்தில் அறைந்த ஆசிரியர். அதைப் பார்த்து சிரித்த சகபாடிகள். இத்தனைக்குள்ளும் படிப்பில் ஆர்வமூட்டிய தாய், சகோதரர்கள் மற்றும் ஆசிரியர்கள் என கடந்து போனது.
2002ம் ஆண்டு, O/L இல் 9 A, 1 C எடுத்தேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் 31வது நிலை. A/Lஇல் படிப்பே வாழ்வாகிப் போனது.
2005ம் ஆண்டு மாவட்டத்தில் முதலிடமும், தேசியளவில் 21ம் வந்த போது, மற்றவர்கள் நம்புவது ஒரு புறம் இரிக்க, எனக்கே நம்ப முடியவில்லை. மேலே படித்தால், இந்த சேர்ஜரி துறையில் படிப்பது இல்லாவிட்டால் நாட்டை விட்டு ஓடுவது என்ற முடிவில், மெடிக்கல் பெகல்டியை விட்டு வெளியாகி, intern தொடங்குவதற்கு முன்பே சேர்ஜரி படிப்பதற்கு classக்கு போன முதலாவது ஆள் நானாகத்தான் இருப்பேன். 2015ல் முதல் தரமே சேர்ஜரி எக்சாமை பாஸாகிய போது, இந்த துறையின் எல்லைக்கு போவது என்று முடிவெடுத்தேன்.
2019ல் இரண்டாவது எக்சாமுக்கு போகும் போது, கட்டாயம் இரண்டு ரிசேர்ச்களை செய்திருக்க வேண்டும். என்னிடம் 17 பப்ளிகேசன்ஸ் இருந்தன. UKஇல் பயிற்சிக்கு வந்து இறங்கிய நாட்களில் படபடப்பாக இருந்தாலும், இங்கே இவர்கள் தந்த ஊக்கம் படிக்க வைத்தது.
கடைசியில் எனது பயிற்சி காலத்தைப் பற்றி எழுதிய எனது கன்சல்டன்ட் “most qualified orthopaedic surgeon in Sri Lanka” என எழுதியிருந்தார்.
FRCS பட்டமளிப்பு விழாவிற்காக, UKஇற்கு வந்திருக்கிறேன். இந்த FRCS பரீட்சை எழுதுவதற்கு, MRCS பாஸாகி, சேர்ஜரியின் அனைத்து பயிற்சிகளையும் முடித்து, 3 கன்சல்டன்மார் இவர் தகுதியானவர்தான் என உறுதிப்படுத்த வேண்டும்.
யார் செய்த புண்ணியமோ, MRCSஎக்சாம் எழுதாமலேயே, எனது portfolioவையும் கன்சல்டன்ட்மாரின் பரிந்துரைகளையும் பார்த்து, நேரடியாகவே FRCSஇற்கு அனுமதி தந்தார்கள். முதல் தரமே அதில் பாஸ். இங்கே பிரித்தானியாவில் வேலை செய்த மருத்துவமனைக்கு எனது பொஸ்மாரை இரண்டு நாட்களுக்கு முன் பார்க்க சென்றேன்.
“வருஷத்துல ஒரு மாசம் இங்க வந்து, கன்சல்டன்டா வேல செய்ரியா, எல்லாத்தையும் அரேன்ஞ் பண்ணித் தாரன், நீயும் உன்ட ஸ்கில்ஸ வளர்க்கலாம், எங்களுக்கும் கடும் பிரயோசனமா இரிக்கும்” இந்த ஒபர் என்னை கடுமையாக யோசிக்க வைத்திருக்கிறது.
நேற்று 500 வருடங்கள் பழமை வாய்ந்த, Royal college of surgeons, Edinburghஇல் எனது பட்டமளிப்பு விழா நடந்தது.
இத்தனைக்கும் எனக்கு பின்னாலே இழுபட்டுத் திரிந்த எனது மனைவி மக்களும், மற்றும் தாயார், சகோதரர்கள், மாமனார் மாமியார் மற்றும் இதர குடும்பமும் இவ்விடத்தில் இல்லையே என்ற கவலை இருந்தாலும், நண்பர்கள் மூவர் கூடவே வந்திருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.