இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் தமிழக மீனவர்களின் 105 படகுகள் திரும்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படை அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதவது, சுட்டுப் படுகொலை செய்வது, கைது செய்வது என்பது பல்லாண்டுகளாக தொடருகிற பெருந்துயராக இருந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது இலங்கை கடற்படை. கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த படகுகளையாவது மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடப் போவதாக அறிவித்திருக்கிறது.
தமிழக மீனவர்களின் படகுகள் பிப்ரவரி 7-ந் தேதி முதல் ஏலத்துக்கு விடப்பட உள்ளன. பிப்ரவரி 7-ந் தேதி யாழ். காரைநகரில் 65 படகுகளும் பிப்ரவரி 8-ந் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளும் பிப்ரவரி 9-ந் தேதி கிராஞ்சியில் 24 படகுகளும், பிப்ரவரி 10-ந் தேதி தலைமன்னாரில் 9 படகுகளும் பிப்ரவரி 11-ந் தேதி கற்பிட்டியில் 2 படகுகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகிரங்கமாக ஏலம் விடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இந்த அட்டூழிய நடவடிக்கை தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கடைசி நேரத்திலாவது மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் கோரிக்கை.
இதனை கவிஞர் வைரமுத்துவும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“இலங்கை அரசின் பிடியிலிருக்கும் 105 மீனவப் படகுகளும் மீட்கப்பட வேண்டும் அலைவிரிக்கும் சமுத்திரத்தில் வலைவிரிக்கும் மீனவர்க்குப் படகுதான் கடல் கடவுள்.
அவை உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் படகுகள் திரும்ப வேண்டும்.”