அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள , சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இலங்கை ஒரு நடுநிலை நாடு என்ற வகையில், தமது பிராந்தியத்தில் வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய நிலையான நடைமுறையை தாம் வகுத்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி அவருக்கு விளக்கமளித்தார்.
இந்த அணுகுமுறையை அனைத்து நாடுகளுக்கும் சமமாகவே இலங்கை நடத்துகின்றது என்றும் அந்த செயன்முறையில் சீனாவை மட்டும் விலக்க முடியாது என்றும் அமைச்சர் அலி சப்ரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் அலி சப்ரி விக்டோரியா நுலாண்ட்டை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன்போதே சீன கப்பல் தொடர்பில் அமைச்சர் விளக்கமளித்ததாக கூறப்படுகின்றது.
சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒக்டோபர் மாதம் இலங்கையில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.
இந்த நிலையில் சீன கப்பலின் வருகை தொடர்பில் இந்தியாவும் கடுமையான ஆட்சேபனையை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.