இலங்கை மத்திய வங்கி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பணம் அச்சிடுவதை பெருமளவில் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் 341 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்ட போதிலும் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 47 பில்லியன் ரூபாய்கள் மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாணயச் சபையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளவுள்ள உடன்படிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பிற்போடப்படும் என சில தரப்பினர் முன்வைக்கும் கூற்று அடிப்படையற்றது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு உரிய முன்மொழிவை சமர்ப்பிப்பதே மத்திய வங்கியின் இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.