இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திரைசேறி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று (03) இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.
அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் எதிர்கால நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு இலங்கை முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மட்ட அனுமதியை பெறுவதும் மற்றொரு முக்கிய ஒரு மைல்கல்லாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இங்கு கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கை ஒரு முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. நிதி ஸ்திரத்தன்மையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். இந்தச் செயல்பாட்டில் தொடர்ந்து ஆதரவளிக்கும் எங்கள் இருதரப்பு பங்காளிகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் எமது இலக்கை மையமாகக்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களும் அரச கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் என்பதோடு, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும் நமது அபிவிருத்தி செயல்முறையை மீண்டும் தொடங்கவும் உதவும். இந்த அரசாங்கம் சமூக மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. நமது குடிமக்கள் முக்கியமான பொதுமக்கள் சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.
இங்கு உரையாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்கள் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலும் இலங்கையின் நிதிப் பாதுகாப்பை மீட்டெடுக்கும். இலங்கையின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்ற இந்த ஆக்கபூர்வமான கூட்டத்தில் எங்களுடன் இணைந்ததற்காக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
2022 செப்டெம்பர் 01 ஆம் திகதி, இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆதரவுடன் நான்கு வருட வேலைத்திட்டத்திற்காக அதிகாரிகள் மட்ட இணக்கம் எட்டப்பட்டது. 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டமானது பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மீட்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் அதே வேளையில் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்கும் மற்றும் இலங்கையின் நிலைத்தன்மை மற்றும் நிதி கட்டமைப்பை பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையில் இலக்கு ரீதியான சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது:
இதில் முதல் விடயம் நிதி சீர்திருத்தம். வருமான நிர்வாக சீர்திருத்தங்களுடன் இணைந்து, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து எழும் நிதி அபாயங்களைக் குறைத்து, மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கு விலைப் பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதுடன் வருமான இலக்கு அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிடுகிறது. மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க, தற்போதுள்ள சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேம்படுத்துவதும் இதில் அடங்கும்.
இரண்டாவது விடயம், அரச கடன் நிலைத்தன்மையை மீளமைப்பதாகும். இலங்கையின் கடன் நிலைமை சர்வதேச நாணய நிதியத்தால் நீடிக்க முடியாததாகக் கருதப்பட்டு, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, விலை ஸ்திரத்தன்மையை வழமை நிலைக்கு கொண்டு வருவது மற்றும் வெளிப்புற பாதுகாப்பை மீண்டும் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனமாக செயற்படுவதை வலுப்படுத்துவதற்கான கொள்கைக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் சட்டம் ஒன்று விரைவில் அமைச்சரவையின் அனுமதியை பெற்று நிறைவேற்றப்பட உள்ளது.
வேலைத்திட்டத்தின் நான்காவது விடயம், இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான முக்கிய நிபந்தனையான நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதாகும். இலங்கையின் வங்கி முறைமை போதுமான அளவு மூலதனமாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் அதன் அரச வங்கிகளின் தாங்கும் தன்மை மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலமும் இது அடையப்படும்.
இந்த விடயங்களுக்கு மேலதிகமாக, இலங்கையின் சட்ட கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டு வருதோடு, இலங்கையின் வளர்ச்சித் திறனை மேம்படுத்த விரிவான கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை செயல்படுத்தும். ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும்.