கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்த படையினர், அவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.
குறித்த 12 இந்திய கடற்தொழிலாளர்களும் கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.பாலசுப்ரமணியம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில், இன்றைய தினம் பகல் 11.40 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இந்திய கடற்தொழிலாளர்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அன்றைய தினம் குறித்த இரண்டு வழக்குகளுக்கும் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு கட்டளை இடப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றில் சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.