இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் நேற்று (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட தமிழ் பகுதிகளில் கடந்த காலத்தில் இனியபாரதி தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இயங்கி வந்த முகாம்கள் மற்றும் மயானங்களில் இரண்டு தினங்களாக குற்றப் புலனாய்வாளர்கள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை , துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்கள் நடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை கடந்த 6 ஆம் திகதி திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் வைத்து குற்றப் புலனாய்வாளர்கள் கைது செய்திருந்தனர்.
இதை அடுத்து இனியபாரதியின் முன்னாள் சாரதியான செந்தூரான் கடந்த 9ஆம் திகதி கல்முனை நகரில் வைத்து குற்றப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த் குற்றப் புலனாய்வாளர்கள் தம்பிலுவில் மகா வித்தியாலயத்திற்கு அருகில் பாடசாலை வீதியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வந்த இனியபாரதி யின் காரியாலயத்தை முற்றுகையிட்டு சோதனையிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனிய பாரதியின் மற்றும் ஒரு சகாவான திருக்கோவில் விநாயக புரத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்து நேற்று மாலை குற்றப் புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இதனை பொலிஸ் உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

