இந்தியாவையே உலுக்கிய 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவனை பொலிசார் தான் கொன்றுவிட்டனர் என தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சயாத்பாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த வாரம் காணாமல் போனார். அடுத்த நாள், பக்கத்து வீட்டில் படுக்கை விரிப்பில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கைப்பற்றப்பட்டது. சிறுமியின் உடலில் பல இடங்கள் பற்களால் கடிக்கப்பட்ட தடயங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்ட வீட்டின் உரிமையாளர் பல்லகொண்ட ராஜு இந்த சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவானார். இதையடுத்து, அவரை தீவிரமாக பொலிசார் தேடி வந்தனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். தெலங்கானா மாநில தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டி, குற்றவாளியை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜனாகான் மாவட்டத்தில் கான்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரயில் தண்டவாளத்தில் பல்லகொண்ட ராஜு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த கொடூரன் ராஜூ தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் தாயார் கூறுகையில், பொலிசார் தான் என் மகனை கொன்றுவிட்டனர், தற்போது அதை தற்கொலை போல காட்ட முயற்சிக்கின்றனர் என கூறினார். ராஜூ சில மாதங்களுக்கு முன்னர் தனது தாயார் மற்றும் மனைவியுடன் சண்டை போட்ட நிலையில் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.
ராஜூ மனைவி மெளனிகா கூறுகையில், பொலிசார் தான் என் கணவரை விசாரணைக்கு என அழைத்து சென்று கொன்றுவிட்டனர், அவர் உடலை சென்று பார்க்க கூட எங்களிடம் பணம் இல்லை. ராஜூ உடலை எங்களிடம் பொலிசார் ஒப்படைக்க வேண்டும், நான் சில மாதங்களுக்கு முன்னரே அவரை பிரிந்து வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன் என கூறினார்.
ராஜூ மாமியார் கூறுகையில், 15 நாட்களுக்கு முன்னர் ராஜூ எங்கள் வீட்டிற்கு இரவில் குடிபோதையில் வந்தான், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் என் கழுத்தை அறுத்து கொல்ல பார்த்தான், நல்லவேளையாக என் மகன் தான் என்னை காப்பாற்றினான், என் மகளுக்கும், ராஜூவுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது என கூறியுள்ளார்.