ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவரை இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கொலை வழக்கு பதிவு செய்து இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுந்தீவு அருகே இந்திய மீன்பிடி படகுகள் மீது இலங்கை கடற்படையினரின்; ரோந்து படகு மீது மோதியதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை கண்டிக்கத்தக்கது என்பதுடன் இந்த கடற்றொழிலாளரின் உயிரிழப்பிற்கு இலங்கையே காரணம் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை மத்திய அரசு முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வைகோ, இலங்கை கடற்படை மீது கொலை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அன்புமணி வெளியிட்டுள்ள தனி அறிக்கையில், தமிழக கடற்றொழிலாளர்களுக்கு குறித்த பகுதியில் மீன்பிடிக்க பாரம்பரிய உரிமை உள்ளது.
ஆனால், கடற்றொழிலாளர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர் அவர்களை கொலை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
எனவே அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
அத்துடன், கடற்றொழிலில் ஈடுபட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.