போதைப் பொருள் பாவனையை ஒழிக்க கோரி பேரணி ஊர்வலம் ஒன்று திருகோணமலை கிண்ணியா பகுதியில் இன்று (01-01-2023) காலை இடம்பெற்றது.
இந்த பேரணியானது குட்டிக்கராச்சி சந்தியில் இருந்து டி சந்தி வரை பேரணியாக சென்றதுடன் புஹாரி சந்தியில் கிண்ணியா அறபா மகாவித்தியாலய மாணவர்களால் போதை ஒழிப்பு வீதி நாடகமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“போதைப் பொருள் பாவனையற்ற சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபட வாருங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தினை கிண்ணியா டைட்டனிக் விளையாட்டு கழகம் மற்றும் மரத்தடி இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
போதைப் பொருள் பாவனையின் அதிகரிப்பினை ஒழிக்க இந்த விழிப்புணர்வு ஊருவலம் இடம்பெற்றது.
இதில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் போதை ஒழிப்பு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியும் பேரணியாக சென்றனர்.
இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி மற்றும் இளைஞர், யுவதிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.