ஆதிவாசிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீளவும் அவர்களிடமே ஒப்படைக்க மகாவலி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
பொல்லேபெத்த மற்றும் ரம்பகன் ஓயா ஆற்றுப் படுகையின் அருகாமைப் ககுதிகளில் ஆதிவாசி சமூகத்தினர் பயன்படுத்தி வந்த காணிகள், மகாவலி அதிகார சபையின் தலையீட்டின் பேரில் விவசாய நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
விவசாய நடவடிக்கை
விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் பொல்லேபெத்த மற்றும் ரம்பகன் ஓயா ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த வனப்பகுதிகளைக் கனரக இயந்திரங்கள் கொண்டு துப்பரவு செய்திருந்தன.
ஆதிவாசி சமூகத்தினரின் வாழ்வாதாரத்தையும் கலாசாரத்தையும் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நில அபகரிப்பு மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, ஆதிவாசி சமூகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (26) செவ்வாய்க்கிழமை , ஆதிவாசி சமூகத்தினரின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை
ஆதிவாசி தலைவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பூர்வீக நிலங்கள் அனைத்தையும் அந்த நிறுவனங்களிடமிருந்து மீட்டு, மீண்டும் ஆதிவாசி சமூகத்தினரிடம் ஒப்படைப்பதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

