அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸுடன் மோதினார்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சவால் அளிக்கும் விதத்தில் விளையாடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த போட்டியில் 6-3, 7-6(4) 7-6 (5) என்ற செட் கணக்கில் ஸ்டீபனோஸ் சிட் சிபாஸை வென்று சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
இது இவர் வெல்லும் 10ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்ஸ்லாம் என்ற அளவில் இந்த வெற்றியின் மூலம் அவர் 22ஆவது பட்டமாகும். இதன் மூலம் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
ஆட்டத்தில் ஜோகோவிச் தான் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.
ஆனால் அவ்வளவு எளிதாக ஜோகோவிச் வெற்றியை பறிக்க, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் விடவில்லை.
முதல் செட்டை அவர் எளிதாக விட்டுக் கொடுத்தாலும், அடுத்த 2 செட்களில் கிரீஸ் வீரர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜோகோவிச் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
இந்த வெற்றியை ஜோகோவிச் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சாம்பியன் ஜோகோவிச்சிற்கு வாழ்த்துகளும் பாராட்டும் குவிந்துள்ளன.