அரிசியை நன்கொடையாக வழங்குமாறு சீனாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு சீனா ஒரு மில்லியன் மெற்றிக் தொன் எடையுடைய அரிசியை சீனா, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ரமேஸ் பத்திரண அண்மையில் கூறியிருந்தார்.
எனினும் ஒரு மில்லியன் மெற்றிக் தொன் எடையுடைய அரிசியை நன்கொடையாக வழங்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இலங்கைக்கு பாரியளவு தொகை அரிசி நன்கொடையாக கிடைக்கப் பெறாது என ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த ஆங்கில ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் பந்துல குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய அரிசி இலங்கைக்கு கிடைக்கப் பெறும் எனவும் அதில் மாற்றமில்லை எனவும் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் மகேஸ் விக்ரம தெரிவித்துள்ளார்.
என்ன வகையான அரிசி என்பது குறித்து வெளிவிவகார அமைச்சு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016ம் ஆண்டு புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் தனி நபர் ஒருவர் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 104.5 கிலோ கிராம் எடையுடைய அரிசியை நுகர்கின்றார்.
இதன்படி, நாட்டின் மொத்த அரிசி தேவை ஆண்டு ஒன்றுக்கு 2.1 மில்லியன் மெற்றிக் தொன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மொத்த வருடாந்த அரிசித் தேவையில் அரைவாசிப் பகுதி அதாவது ஒரு மில்லியன் மெற்றிக் தொன் எடையுடைய அரிசியை சீனா வழங்கக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்குகும் இடையில் இறப்பர் – அரிசி உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதினை முன்னிட்டு இந்த அரிசி நன்கொடை வழங்கப்படுவதாகவும் மார்ச் மாதமளவில் அரிசி தொகை நாட்டை வந்தடையும் எனவும் டொக்டர் ரமேஸ் பத்திரன கூறியிருந்தார்.