பிரதமர் பதவியை தனதாக்கும் நோக்கில் சமகால நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா சென்றிருந்த பசில் நாடு திரும்பியுள்ள நிலையில், தன்னை பிரதமராக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு தன்னை பிரதமராக்க வேண்டும் என பசில் அரசாங்கத்திற்குள் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என பசில் விடுத்த கோரிக்கைக்கு அமைய விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இராஜாங்க அமைச்சர்களிற்கு மேலதிக பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன எனவும் இராஜாங்க அமைச்சர்களின் கீழ் வரும் திணைக்களங்களில் மாற்றங்கள் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய நிர்வாக அதிகாரிகளின் பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம் ஜனாதிபதியின் செயலாளர் பிபிஜயசுந்தரவின் பதவியில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பி.பி. ஜயசுந்தர 31 ம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்கின்றார். இந்நிலையில் நிதியமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல், பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வைக் காண்பதற்காக தற்போதைய முழு அமைப்பு முறையிலும் மாற்றங்கள் செய்யப்படலாம்,என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை பிரதமர் பதவியில் இருந்த தான் விலக வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. ஊடகங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.