நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசுக்கு ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையேல் எமது போராட்டம் தீவிரமடையும், ஜனநாயக வழியில் அரசை விரட்டியடிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
அரசுக்கு எதிராக மார்ச் 15ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்.
அரசுக்கு ஒரு மாதம் காலக்கெடுவை வழங்குவதற்கான அறிவித்தலை விடுக்கவே நாம் கொழும்பு வருகின்றோம்.
அந்தக் காலப்பகுதிக்குள் தீர்வு இல்லையேல் எமது போராட்டம் வலுக்கும். கொழும்பு வருவதற்கு பேருந்து இல்லாவிட்டால் மக்கள் நடந்தாவது வருவார்கள்.
எனவே, எமது போராட்டத்தைத் தடுக்க முற்பட வேண்டாம். நிச்சயம் எமது பலத்தைக் காட்டுவோம் என கூறியுள்ளார்.