அரசாங்கத்தின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள், முகவரகங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் செயற்பாடுகளை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழுக்கள், முகவரகங்கள் அல்லது ஆலோசனைக்குழுக்களின் சேவைகளை அதுசார் நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் ஊடாக செய்ய முடியும் என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவின் சேவைகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டு, அதன் செயற்பாடுகள் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
36 ஊழியர்களுக்காக 5.8 மில்லியன் ரூபா
தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 15 பேர் உட்பட ஏனைய அலுவலக ஊழியர்கள் என 36 ஊழியர்களுக்காக 5.8 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலவிடப்படுகின்றது.
அதேவேளை ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு கடந்த மாத வேதனத்துக்காக மாத்திரம் 2.7 மில்லியன் ரூபா, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்துக்கான மாதாந்த வாடகையாக 1.4 மில்லியன் ரூபா என மொத்த செலவுக்காக 5.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவின் இந்த ஆண்டின் செலவுகளுக்காக மாத்திரம் 71 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவின் பணிகள் முன்னர் நிதி மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பணிப்புரை
இதனூடாக , தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் பொதுநிர்வாக அமைச்சுக்குள் உள்வாங்கப்படுவார்கள். அதேசமயம் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் அப்போதைய ஜனாதிபதியால் நிறுவப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளும் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளை நீதி அமைச்சின் கீழ் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இதுவரையில் குறைந்தபட்சம் 50 ஆணைக்குழுக்கள் மற்றும் ஆலோசனைக்குழுக்கள் மூடப்படுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
அத்துடன் இதுபோன்ற 50 ஆணைக்குழுக்கள் அடையாளம் காணப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற சுமார் 17 நிறுவனங்கள் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிலையில் விரைவில் அவற்றின் செயற்பாடுகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாகவும் ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது