உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் உடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாடினார்
உக்ரைன் மீது கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இந்தப் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், இரு நாட்டு ராணுவம் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
புதினின் இந்தப் போர் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளையும் அறிவித்து வருகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையே எடுத்து வருகிறது.
இருப்பினும், சீனா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இதற்கிடையே உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டைச் சீனா வாபஸ் பெற வேண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தி இருந்தார்.
இந்த கோரிக்கையைச் சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மேலும், உக்ரைன் விவகாரம் இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்க காரணம் அமெரிக்காவே என்ற ரீதியிலும் ஜி ஜின்பிங் சாடியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரு நாட்டுத் தலைவர்கள் இடையே விரிவான உரையாடல் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான், உக்ரைன் போருக்கு அமெரிக்காவே காரணம் என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்குப் பின்னர் சீனா-தைவான் குறித்து உலக நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், அது குறித்துத் தான் அந்த அறிக்கையில் பெரும்பாலும் பேசப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் போருக்கு ரஷ்யா மட்டுமே காரணம் என்ற கருத்து உருவாக்கத்திற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்தப் போர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஷ்யாவின் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்கும் என்றும் போர் தொடங்கும் முன்பு ரஷ்யா தெரிவித்திருந்தது.
இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இரு தரப்பும் உடன்பாட்டு எடுக்கும் முடிவு தான் அமைதிக்கு வழிவகுக்கும்.
பாதுகாப்பு தொடர்பான பதற்றத்தைத் தணிக்க உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா நேட்டோ அமைப்புகளும் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்த சீனா, தேவையற்ற பொருளாதாரத் தடைகள் என்பது நிலைமையை மேலும் கடினமானதாகவே மாற்றும்.
மேலும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் என்பது அந்நாட்டு மக்களையே கடுமையாகப் பாதிக்கும் எனச் சீனா தெரிவித்துள்ளது. புலிக்கு மணி கட்டியது யாரோ அவர்கள் தான் நெருக்கடியான நிலைக்குப் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ரஷ்யா மீது சுமத்தும் பொருளாதாரத் தடைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் விளக்கினார்.
மேலும், உக்ரைன் நகரங்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக மிருகத்தனமான தாக்குதல்களை நடத்தும் ரஷ்யாவிற்குச் சீனா ஆதரவை வழங்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பைடன் விளக்கினார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.