கடல் நீரின் வெப்பநிலை இன்னும் ஒரு மாதத்திற்கு நீடித்தால், இலங்கையை சுற்றியுள்ள கடல் பரப்பில் காணப்படும் பவளப்பாறைகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அதிகரித்துவரும் வெப்பமான காலநிலையின் காரணமாக கடல் நீரின் வெப்பநிலை சராசரி அளவை விட அதிகரித்து காணப்படுகின்றது.
இவ்வாறு கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதனால் இலட்சத்தீவு கடல் (Laccadive Sea) மற்றும் மன்னார் வளைகுடாவில் கடுமையான பவளப்பாறை வெளுப்பு ஏற்படும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகமையின் (NARA) புதிய பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே. அருளானந்தன் இந்நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு குறிப்பிட்டதாவது,
“வெப்பத்தின் அளவு 31 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இரண்டு வாரங்களாக நீடித்து காணப்படுகின்றது.
கடல் நீரில் உள்ள பவளப்பாறைகளின் நிலை குறித்து நாரா எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் வெளுப்பு ஏற்படுவதை நிராகரிக்க முடியாது.
“வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியஸுக்கு இடையில் மாறினால், அது பவளப்பாறைகளின் ஆரோக்கியத்திற்கு சாதகமாக காணப்படும்.
இருப்பினும், தற்போதைய அதிகரித்த வெப்பநிலை இன்னும் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடித்தால், பவளப்பாறைகள் அழிவடைய கூடும்.
கடல் வெப்ப அலைகள் அரிதான தீவிர வானிலை நிகழ்வுகளாகும், அவை அசாதாரணமான அதிக கடல் வெப்பநிலையின் நீண்ட காலங்களை உள்ளடக்கியது.
நீரின் வெப்பநிலை சாதாரண அளவை விட உயரும் போது பவளப்பாறைகளில் வெளுப்பு ஏற்படுகிறது.
இத்தகைய நிலைமைகளின் கீழ், பவளப்பாறைகள் அவற்றின் திசுக்களில் வாழும் நுண்ணிய பாசிகளை வெளியேற்றுகின்றன.இதன்போது வெளியயேற்றப்படும் நுண்ணிய பாசிகள் பவளப்பாறைகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் பல வகையான அல்காக்கள் பவளப்பாறைகளுக்குள் நன்மை பயக்குவனவாக காணப்படுகின்றது.
இது பவளப்பாறைகளின் நிறம், ஊட்டச்சத்து மற்றும் அதன் சுண்ணாம்புக் கூட்டை உருவாக்க உதவும் நீர் கலவையில் சிறிய மாற்றங்களை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.