அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் உலக பங்குச்சந்தைகள் பெரும் அதிர்வுகளை சந்தித்து வருகின்றன.
இதன் தாக்கமாக, கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (ஏப்ரல் 07) காலை 9.51 மணியளவில் வர்த்தக நடவடிக்கைகள் தற்காலிகமாக 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கு காரணமாக, S&P SL20 குறியீடுகள் 5%க்கும் அதிகமாக வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. வர்த்தகம் இடைநிறுத்தப்பட்ட நேரத்தில்:
அனைத்து பங்கு விலைச் சூட்டெண் 639.01 புள்ளிகள் குறைந்து 14,734.34 ஆகவும், S&P SL20 விலைச் சூட்டெண் 240.45 புள்ளிகள் குறைந்து 4,292.90 ஆகவும் இருந்தது.
இது முறையே 5.30% மற்றும் 4.16% வீழ்ச்சிகளை பதிவு செய்துள்ளன.
வாரத்தின் முதல் நாளான இன்றே உலக சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. நிலை தொடரும் பட்சத்தில், இது 1987 பங்கு சந்தை வீழ்ச்சிக்குப் பிறகு மிகப்பெரிய சரிவாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிங்கப்பூர் பங்குச்சந்தை தொடக்கத்திலேயே 7%க்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) மற்றும் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் சிறிய ஏற்றத்தைக் கண்ட பிறகு, மீண்டும் கடுமையாக வீழ்ந்துள்ளன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37%) குறைந்து 3,544.02 ஆகும் நிலைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக பதட்டம் உலக சந்தைகளை பாதிப்பதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்ந்து தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.