கொலராடோ ஸ்பிரிங்ஸ் (Colorado Springs) விமான நிலையத்திலிருந்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் (Dallas Fort Worth) நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக பணியாளர்கள் தெரிவித்ததை அடுத்து, விமானம் டென்வர் (Denver) சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
விமானம் ஓடுபாதையில் இறங்கி பயணித்துக்கொண்டிருந்தவேளை தீடிரென தீபரவல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பயணிகள் ஸ்லைட்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமானத்தில் இருந்த 172 பயணிகளும் 6 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், வட அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த தொடர்ச்சியான உயர்மட்ட விபத்துக்கள் விமானப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
முன்னதாக, வொஷிங்டன் டி.சி.யில் ஒரு பயங்கர விபத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானம் அமெரிக்க இராணுவ உலங்கு வானூர்தியுடன் நடுவானில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அரசாங்க செலவு சேமிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான தகுதிகாண் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், இந்த விபத்தானது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது..