டுபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் (Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் டுபாய் எக்ஸ்போ – 2020 (EXPO – 2020) கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்தும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர்.
இச்சந்தர்ப்பத்தில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் 50 ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்துக்கு ஜனாதிபதி அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கொவிட் தடுப்பு மற்றும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் கொவிட் பின்புலத்தில் பொருளாதாரத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி டுபாயின் துணைப் பிரதமருக்கு தெளிவுபடுத்தினார்.
இலங்கையின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை உலகுக்கு கொண்டு செல்வதற்கு எக்ஸ்போ கண்காட்சிக் கூடம் சிறந்த சந்தர்ப்பமாகுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கு வாய்ப்பளித்தமைக்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.
துணைப் பிரதமரின் அழைப்பின் பேரில் “எக்ஸ்போ 2020” கண்காட்சியைப் பார்வையிடுவதற்கும் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.
1083 ஏக்கர் பாலைவனப் பூமியில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ” கண்காட்சியில் 192 நாடுகள் பங்குபற்றியுள்ளன. “உள்ளங்களை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கண்காட்சி, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெறும். இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு இதுவரை பல்வேறு நாடுகளில் இருந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
ஜனாதிபதி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டதோடு, விசேட அதிதிகளுக்காக வைக்கப்பட்டிருந்த நினைவுப் பதிவேட்டிலும் குறிப்பினை பதிவிட்டார்.
மேலும் ஜனாதிபதி, இலங்கையின் கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிடும் போது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமர் மற்றும் துபாயின் ஆளுநர் ஷேய்க் மொஹமட் பின் ரசீத் அல்மக்தூம் (Sheikh Mohammed Bin Rashid Al Maktoum) சந்தித்தது ஒரு விசேட நிகழ்வாகும்.
இலங்கையில் இருக்கின்ற முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக, கலாசார தொடர்புகள் பற்றி பிரதமரைத் தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
“எக்ஸ்போ – 2020” கண்காட்சி இந்நாட்டுச் சுற்றுலாக் கைத்தொழில் மற்றும் தேயிலை, ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதித் துறைகளின் மேம்பாட்டுக்கு சிறந்ததொரு வாய்ப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் மல்ராஜ் டி சில்வா ஆகியோர் ஜனாதிபதியுடன் இச்சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டனர்.