கனடாவில் அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி தற்போது இலங்கை அரசிலும், தென்னிலங்கையின் பல்வேறு அரசியல் மற்றும் சமூக தரப்புகளிடையிலும் மிகுந்த கலக்கத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அநுர அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ள நிலையில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கனடா தூதுவரை அழைத்து இலங்கை அரசின் நியாயத்துக்குரிய அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் சார்பில் இந்த நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளமை, மூல தேசத்தில் நீதி மறுக்கப்படும்போது, தங்கள் இழப்புகளுக்கு ஒரு வகையான ஆறுதல் மற்றும் நீதிக்கான குரலாக பார்க்கப்படுகிறது.
“அவலத்தை சுமந்த மக்கள் தமது சொந்த மண்ணில் நீதி மறுக்கப்படும்போது, தாம் வாழும் தேசத்தில் அதை வெளிப்படுத்துவது அவர்களுக்கு ஆறுதலும் நிம்மதியும் தருகிறது” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வால் இலங்கையின் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையிலும், சர்வதேச தூதரக நிலைப்பாடுகளிலும் புதிய பரிமாணங்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக, இனப்படுகொலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கும், அந்த நினைவிடம் அரசாங்க அனுமதியுடன் கனடாவில் நிறுவப்பட்டுள்ளதற்கும், இலங்கை அரசாங்கம் எதிர்வினை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கங்கள் மற்றும் கடித பரிமாற்றங்கள் தற்போது இரு நாடுகளுக்கிடையே பரிமாறப்பட்டு வருகின்றன.
இலங்கையின் தென் பகுதியில் இந்த நினைவுத்தூபி அமைப்பு தொடர்பில், சில தேசியவாதக் கருத்துக்களும், ஊடக விமர்சனங்களும் பரவி வருகின்றன. இது ஒரு அதீத அரசியல் உணர்ச்சிப்பூர்வ விவாதமாக மாறும் சாத்தியம் உள்ளது.
இந்நிலையில், குறித்த நினைவுத்தூபி தொடர்பாக சர்வதேச அளவில் ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து வலுத்துவரும் சூழ்நிலையில், இது இலங்கை அரசியல் மற்றும் வெளிநாட்டுறவுக் கொள்கைகளில் முக்கியமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

