அடுத்த மின்சாரக் கட்டண திருத்தத்தின் கீழ் 25% முதல் 30% வரையிலான கட்டண உயர்வை அரசு திட்டமிட்டிருப்பதை தாக்கி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து, முந்தைய அரசின் ஐ.எம்.எப் உடன்பாடுகளை பின்பற்றுகிறது என கூறியுள்ளார்.ஜூலை மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மீளாய்வுக்கு முன், நிபந்தனைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் கட்டண உயர்வை முன்னெடுத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டில் லாபம் ஈட்டிய இலங்கை மின்சார சபை, தற்போது ரூ.271.1 பில்லியன் நட்டமடைந்ததாக கூறுவது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கைவிடும் நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ரூ.9000 மின்சாரக் கட்டணத்தை ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைப்பதாக கூறிய வாக்குறுதி மீறப்படுவதாகவும் சஜித் புகார் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மின்சார நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து, எதிர்க்கட்சியாக நாங்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி செய்கிறோம் என்றும், இதுபோன்ற கட்டண உயர்வை எதிர்த்து ஒன்றிணைந்து போராட அனைவரையும் அழைக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.