யாழ்ப்பாணத்தில் சில வீடுகளுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்கள் காணப்படுவது போன்று, சட்ட ரீதியான குழப்பங்களை உருவாக்கும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமாரன் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், யாழ்ப்பாணத்தில் காணிக் குற்றச்செயல்கள் முற்றுகையிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் பலர் உறுதிப்பத்திரங்களின்றி காணிகளை ஆண்டாண்டு காலமாக வைத்திருப்பதாகவும், இது அபிவிருத்தி முயற்சிகளில் பெரும் தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“சில சட்டத்தரணிகள் நுட்பமான முறையில் ஒரே வீட்டிற்கு இரண்டு உறுதிப்பத்திரங்களை உருவாக்கி, சட்ட வழக்குகள் மூலம் அதை சட்டபூர்வமாக்க முயற்சிக்கின்றனர். இது பெரிய மோசடியாகும்,” என்றார்.
மேலும், யுத்த காலத்தில் அரசு அல்லது அதிகாரிகளால் சுவீகரிக்கப்பட்ட பல காணிகள், இன்று கூட அந்த நிலைமைமே தொடர்வதாகவும் குறிப்பிட்டார். உதாரணமாக, முன்னாள் அமைச்சரொருவரால் சுவீகரிக்கப்பட்ட சிறீதர் தியேட்டர் காணி, இன்று வரை பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றது எனக் கூறினார்.
“இன்று அரச காணி எது, தனியார் காணி எது என்பது கூட தெளிவாக இல்லை. இதனால் மக்களுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது போன்ற குழப்பங்களை தீர்க்க, உறுதிப்பத்திர அடையாளங்களுடன் விண்ணப்பித்தவர்கள் குறித்த உரிமைகளைப் பெறுவார்கள்,” என்றார்.
எதிர்காலத்தில் மக்களுக்கு அவர்களது உரிமைகளை வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்படும் என்றும், எந்தவொரு குடியிருப்பும் சுய இழப்பிற்கு உள்ளாகாது என்றும் உறுதியளித்தார்.
இத்தகவல்கள், யாழ்ப்பாணத்தில் காணிகள் மற்றும் காணி உரிமைகளுக்கு எதிராக நடைபெறும் திட்டமிடப்பட்ட மோசடியை வெளிக்கொணர்கின்றன. இதற்கான அரச மற்றும் சட்ட நடவடிக்கைகள் எப்போது எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க கேள்வியாகும்.