கொத்மலை ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயணிகள் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பரிதாபகரமான விபத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் நிகழ்ந்தது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட பேருந்து, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட பகுதியில் இருந்து சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் சுமார் 75 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும், பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது விசாரணை நடாத்தி வரும் கொத்மலை பொலிஸார், பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். மேலும், விபத்து தொடர்பான முழுமையான விசாரணை தொடர்கின்றது.
விபத்து தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன குமார குணசேன ஆகியோர், சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பல மரணங்களை ஏற்படுத்திய இந்த விபத்து, நாட்டெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.