இனவாத நோக்கில் செயற்படுவதாலேயே தையிட்டி விவகாரத்தில் தீர்வை முன்வைக்காத ஜனாதிபதி, தமிழ் அரசியல் கட்சிகள் மீது பழிபோடுகிறார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். திஸ்ஸ விகாரை கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அந்த நேரத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதத்தை பிரச்சாரம் செய்கிறார்கள் எனச் சிங்கள மக்களைத் திசைதிருப்பி, விகாரை கட்டுமானத்தை முடிக்கச் செய்ததாக அவர் தெரிவித்தார்.
இன்று, மக்களின் நலனுக்காக செயல்படும் தமிழ் அரசியல் கட்சிகளை குற்றம் கூறி, மக்களை ஏமாற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
“இனவாதத்தை தூண்டும் தேசிய மக்கள் சக்தி போன்ற இயக்கங்கள், தமிழ் கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தங்களது உச்சபட்ச இனவாதத்தை வெளிப்படுத்துகின்றன” எனக் கூறிய கஜேந்திரகுமார், தமிழர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.