வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்துக்குள் அசைவ உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை, சைவ சமயத்தை பின்பற்றும் மக்களிடையே பெரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய அசைவ உணவகத்திற்கு எதிராக, அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் இன்று மாலை 4.30 மணிக்கு, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து சைவ சமய நம்பிக்கையுடன் வாழும் மக்களும், பக்தர்களும், சமூகவிருத்தி அமைப்புகளும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
“நல்லூரான் உற்சவ வளாகத்தில் அசைவ உணவகம் என்பது எம்மை பாதிக்கும் ஒரு நடவடிக்கை. கோவிலின் பரிசுத்தம் குலைக்கப்படும் செயல் இது” என சைவ மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகம் கோவில் அருகே – அதிலும் முக்கியமாக உற்சவ நடைபாதை அருகில் இயங்குவதாகவும், இது பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சைவ அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. சைவ சமயத்தை மதித்து, இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
போராட்டத்தில், எச்சரிக்கை கூறும் பதாதைகள், கோஷங்கள், மற்றும் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகம் மற்றும் பொது நிர்வாக அதிகாரிகள் எந்தவிதப் பதிலும் வழங்காத நிலையில், மக்கள் எதிர்ப்பு எந்தபடிக்கு உயரும் என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.