இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் நாளை முன்னிட்டு, கனடாவின் பிரதமர் மார்க் கார்ணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடையவைக்கும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து முழுமையாக ஆதரிக்கும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உரையில், “இன்று, இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அந்தப் போரில் பல்வேறு வகையான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், மற்றும் ஆயிரக்கணக்கான தமிழர் உயிரிழப்புகள் இடம்பெற்றன.”
“இந்த நினைவேந்தல் நாளில், இழந்த உயிர்கள், சிதறிப்போன குடும்பங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நாங்கள் நினைவுகூர்கிறோம். கனடாவில் வாழும் தமிழர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்த நாளில், நாங்கள் அவர்களுடன் அன்புடன், ஆதரவுடன் இருக்கிறோம்.”பிரதமர் கார்ணி மேலும் கூறினார்.
கனடாவின் பல நகரங்களில் நடைபெற்றுவரும் நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்து அவர் தெரிவித்தார்: “இந்த நிகழ்வுகள், துன்பத்தின் மத்தியில் கூட நியாயத்திற்கான தைரியம் முக்கியம் என்பதை நினைவுறுத்துகின்றன. நீடித்த அமைதிக்காகவும், நியாயமான தீர்வுகளுக்காகவும் உலகம் முழுவதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.”
“தமிழ் இனப்படுகொலையை சர்வதேசரீதியாக உறுதிசெய்தல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைக்கச் செய்வதே நமது பொதுவான நோக்கம்” எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

