யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நிமோனியா காய்ச்சல் காரணமாக 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மே 22ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனடி சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (மே 25) அவர் உயிரிழந்தார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர் திடீர் மரணமாக உயிரிழந்ததையடுத்து, மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகள், நிமோனியா காய்ச்சலே அவரது மரணத்திற்கு காரணம் என உறுதி செய்துள்ளன.
இந்த பருவ காலத்தில் நிமோனியா மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களின் பரவல் அதிகரித்து வருவதால், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுடையோர் சற்று கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

