யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 05 மாணவியை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 ஆம் திகதி, தரம் 05 மாணவர்களுக்குப் பரீட்சை நடைபெற்றது.பரீட்சைக்குப் பிறகு, மாணவர்களே வினாத்தாளை பரிமாறி திருத்த வழிகாட்டப்பட்டது.மாணவி ஒருவர், தன் சக மாணவியை பிழையான விடைகளை சரியாக எழுதுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.இதனை கண்ட ஆசிரியர், இருவரையும் கடுமையாக எச்சரித்து, தடியால் அடித்து தண்டனை வழங்கியுள்ளார்.
மாணவியின் தாயார் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, தண்டனை காரணமாக மாணவிக்கு சிகிச்சை தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இருப்பினும், 27 ஆம் திகதி, மாணவியின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
கைது தொடர்பாக பள்ளியின் சில ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பொலிஸ் நிலையம் முன்பு கூடியனர்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆசிரியரை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக அறிவித்ததை அடுத்து, எதிர்ப்பாளர்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் கல்வி முறைமையில் தண்டனைகள் தொடர்பான சிக்கல்களை மீண்டும் எழுப்பி உள்ளது.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா? ஆசிரியருக்கு ஏதாவது தண்டனை வழங்குமா? – இது குறித்து நீதிமன்ற முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.