யாழ்ப்பாணம் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஒரு சீவல் தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தபோது, கடந்த 04.04.2025 பிற்பகல் 3.30 மணியளவில் கள் இறக்குவதற்காக அவர் தனது பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது சிவில் உடையில் வந்த மதுவரி அதிகாரிகள், நேரம் கடந்துவிட்டதாகக் கூறி மிரட்டி, அவரை 5.40 மணி முதல் 6.00 மணி வரை தடுத்து வைத்து வழக்கு பதிவு செய்ய கையொப்பம் வேண்டியதாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, மதுபாணசாலைக்கு அழைத்துச் சென்று, முகம், வயிறு மற்றும் கால்களில் மிக மோசமாக தாக்கியதாகவும், எட்டுப்பேர் கொண்ட அதிகாரிகள் அவரை விழுத்தி காலால் மிதித்ததாகவும் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட தாக்குதல், பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் தூண்டுதலால் நடத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தாக்கியதற்குப் பின்னர், அவர் மயங்கி விழுந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள அவர், தன்னை மீண்டும் தாக்குவோம் என அதிகாரிகள் மிரட்டியதாகவும், தன் உயிருக்கு பாதுகாப்பு தேவையெனவும் கேட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட விடயங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.