ஐபிஎல் 16ஆவது சீசனின் 17ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் துவங்கி நடைபெறவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைடன்ஸுக்கு எதிராக சொதப்பி தோற்ற நிலையில், அடுத்து லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அபார வெற்றிகளை பெற்றுள்ளது. மறுபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப்புக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும், டெல்லி மற்றும் சன் ரைசர்ஸுக்கு எதிராக 57 ரன்கள், 72 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிகளை பெற்றுள்ளது.
பலமிக்க ராஜஸ்தான் அணி:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம், அந்த அணியின் பௌலர்கள்தான். டிரென்ட் போல்ட், யுஜ்வேந்திர சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், சந்தீப் ஷர்மா, ஜேசன் ஹோல்டர் போன்ற முன்னணி பௌலர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். இதனால், அவர்களை சமாளிக்க சிஎஸ்கே கடுமையாக போராட வேண்டியிருக்கும் எனக் கருதப்படுகிறது.
ருதுராஜுக்கு சவால்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ருதுராஜுக்கு சவால்விடக் கூடிய வகையில் ஒரு பௌலர் இருக்கிறார். ட்ரென்ட் போல்ட்தான் அந்த பௌலர். போல்ட்டுக்கு எதிராக ருதுராஜ் 21 பந்துகளில் 3 முறை ஆட்டமிழந்துள்ளார். இதனால், போல்ட்டுக்கு எதிராக ருதுராஜ் சிங்கில் எடுத்து, போல்ட்டின் சகநாட்டு வீரர் டிவோன் கான்வேவை பவர் பிளேவில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வைக்க வேண்டும்.
4 ஸ்பின்னர்கள்:
சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கேவில்மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மகீஷ் தீக்ஷனா, மிட்செல் சாண்ட்னர் ஆகிய 4 தரமான ஸ்பின்னர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கேவுக்கு இதுதான் பெரிய ஆயுதமாக இருக்கும். தீபக் சஹார் இல்லாததால் பவர் பிளேவில் ராஜ்வர்தன் அல்லது தேஷ்பண்டேவுடன் இரண்டு ஸ்பின்னர்களை பந்துவீச வைக்க முடியும். அப்படி நடந்தால், ராஜஸ்தானுக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். ஆகையால், இன்று சிஎஸ்கேவில் நான்கு ஸ்பின்னர்கள் விளையாடி, ராஜஸ்தானுக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்துவார்கள் எனக் கருதப்படுகிறது.