அப்பிள் ரக அலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாரம்மல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பணத்தை கொள்ளையிட வந்த மூவரில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,
நாளிதழ்களில் விளம்பரத்தினை நம்பி அப்பிள் ரக அலைபேசி வாங்க நாரம்மல பிரதேசத்திற்கு சென்றவர்களிடமே இவ்வாறு கொள்ளையிட முயற்சி செய்யப்பட்டுள்ளது.
ருவன்வெல்ல பிரதேசத்துக்கு அலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த குழுவிற்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவித்து, பொலிஸ் அதிகாரிகளுடன் மொபைல் கொள்வனவுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடத்திற்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும் கூரிய ஆயுதங்களால் அவர்களது காரை தாக்கியுள்ளனர்.
இதன்போது, பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சம்பவத்தில் இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.