எதை மறப்பது…
வலி சுமந்த மாதம் — மே
மண்ணின் மூச்சே நின்ற மாதம்.
கண்ணீரை கடலாக்கி
காலம் கூட தலைகுனிந்த மாதம்.
எதை மறப்பது?
“நாம்” என்று நாக்கு நனைந்த வாழ்வையா?
ஒரு தட்டில் உண்ட உறவையா?
ஒரே இதயமாக துடித்த இனத்தையா?
தேசமே இருண்ட அந்த நாளில்
தீயும் புகையும் வானம் தொட்டது.
பதினெட்டு நாடுகள் பார்த்தபடி நின்றன,
எம்மை அளித்த கைகள்
நீதியின் பெயரால் நிழலை விற்றன.
எம்மை காத்த எல்லைச் சாமிகள்,
மண்ணை விட மனதை நேசித்த வீரர்கள் —
இன்று நினைவுகளில் மட்டுமே நிற்கிறார்கள்.
நாம் போற்றும் உத்தமர்கள்
மௌனத்தின் நடுவே உயிராய் பேசுகிறார்கள்.
அப்பா இல்லாத வீடு,
அம்மா அழைத்திடாத வாசல்,
நண்பன் பெயர் மட்டும் மீதமாய்,
உறவுகள் புகைப்படங்களாய்…
இன்று அக்கா,
நாளை மற்றொரு அக்கா,
மறுநாள் அக்காவின் குழந்தை —
இவ்வாறு ஒவ்வொரு வீடும்
சோகத்தின் சுடுகாடாய் மாறியது.
ஒரு வீட்டில் அப்பா இல்லை,
மற்றொரு வீட்டில் அம்மா இல்லை,
சிறு குழந்தைகள் மட்டும்
தனிமையைத் தாலாட்டாகக் கேட்டு வளர்ந்தனர்.
யாரிடம் சொல்வது?
எந்த கதவின் முன் நின்று அழுவது?
உலகமே கேட்டது போல நடித்தது,
ஆனால் எம் துன்பத்தை
காதில் வாங்கியவர்கள் எத்தனை?
UNO கூட
மௌனத்தை போர்வையாய் போர்த்திக் கொண்டு
வேடிக்கை பார்த்த நாட்களில்
எம் இரத்தம் மட்டும்
மண்ணில் சாட்சியாய் கிடந்தது.
பதினாறு ஆண்டுகள் கடந்தும்
நீதியின் காலடி எம்மை எட்டவில்லை.
காலம் நகர்ந்தாலும்
காயங்கள் நகரவில்லை.
எதை மறப்பது?
உயிர் கொடுத்தவர்களையா?
உறவுகளை இழந்த இரவுகளையா?
அல்லது
இன்னும் நீதிக்காக காத்திருக்கும்
எம் இனத்தின் அமைதியான அழுகையையா?
மறக்க முடியாது…
ஏனெனில்
இது வெறும் வரலாறு அல்ல,
எம் இதயத்தில் இன்னும் எரியும்
உயிர்களின் நினைவுச் சுடர்.

