அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் தடுப்பூசி இந்த வாரம் முழுவதும் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதனை பெற்றுக்கொண்ட மையங்களுக்கே இரண்டாம் தடுப்பூசிக்காகவும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தடுப்பூசி மையத்திற்கும் பிரவேசித்து தங்களது உரிய ஆவணங்களை காண்பித்து உறுதிப்படுத்தியதன் பின்னர், அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேநேரம், நேற்றைய தினம் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 69,266 பேருக்கு குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பத்தரமுல்ல – தியத உயன தடுப்பூசி செலுத்தல் மையத்தில் நேற்று (1) முதல் ஆரம்பமான அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல் பணிகள் எதிர்வரும் புதன்கிழமை (4) வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி செலுத்தல் மையத்தில் குறித்த காலப்பகுதியினுள் 24 மணித்தியாலங்களும், அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ராசெனொ 2 ஆம் தடுப்பூசி மற்றும் ஏனைய தடுப்பூசிகளை இன்று (02) பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான விபரங்களை கீழுள்ள இணைப்பிற்கு பிரவேசிப்பதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.