ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஐநா அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்குரிய ஒரு களம் அல்ல.போராடும் மக்கள் மத்தியில்தான் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும்.
எனினும், எல்லாவிதமான வரையறைகளோடும், தமிழ் மக்களுக்கு என்று கடந்த 16 ஆண்டுகளாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கு மனித உரிமைகள் பேரவைதான். அந்த மனித உரிமைகள் பேரவைக்குள் காலை ஊன்றிக் கொண்டுதான் தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு பாயலாம். ஐநாவுக்கு கூட்டுக் கடிதம் எழுதும் ஒரு சந்திப்பின்போது சிவாஜிலிங்கம் அதை ஓர் உவமையோடு சுட்டிக்காட்டியிருந்தார். மனித உரிமைகள் பேரவையை முற்றாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் பாயப் போகிறோம் என்று சொன்னால் எங்கேயாவது ஒரு காலை ஊன்ற வேண்டும்.ஒரு காலை ஊன்றினால்தான் பாயலாம்.இப்போதைக்கு மனித உரிமைகள் பேரவைதான் எங்களுக்குத் தளம். எனவே அதில் ஊன்றியிருக்கும் காலையும் எடுத்து விட்டால் நாங்கள் விழுந்து விடுவோம் என்று சிவாஜி சொன்னார்.
மனித உரிமைகள் பேரவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. அது தொடர்பாக தமிழ் மக்களுக்கு விமர்சனங்கள் உண்டு.எனினும் அந்த அலுவலகத்தின் அடுத்த கட்டம் தொடர்பாக இந்தமுறை கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து சென்றிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் இங்கு அவதானித்தவற்றின் தொகுப்பாகவும் ஐநாவின் நடவடிக்கைகள் அமையும்.
அனுர அரசுத் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டு ஓராண்டு முடியும் ஒரு மாதத்தில் ஐநாவின் 60ஆவது கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த அரசாங்கம் தனக்கு தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக் கொள்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த ஏழு ஆசனங்களையும் அது தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய ஆணை என்று ஐநாவிலும் உலக அளவிலும் புதுடில்லியிலும் கூறி வருகிறது. ஐநாவும் புதிய அரசாங்கத்தின் கழுத்தை நெரிப்பதற்குப் பதிலாக அதற்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திப்பதாகத் தெரிகிறது. இலங்கை வருகையின் பின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வாறு கருதத்தக்கவையாக உள்ளன.
இவ்வாறு ஐநா இலங்கைக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு காலகட்டத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் பொறுப்புக் கூறல் தொடர்பில் என்னென்ன செய்திருக்கிறது ?
முதலாவதாக, அவர்கள் செம்மணிப் புதை குழியும் உட்பட எல்லாப் புதைகுழிகளின் விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக செம்மணியைப் பார்க்கின்றது.
இரண்டாவதாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த மாதம் நீக்கப்போவதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.எனினும் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் அதுதொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எவையும் வெளி வந்திருக்கவில்லை.
மூன்றாவதாக,ஊழலுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.இதுவரை 70 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணிலும் உட்பட முன்னாள் அமைச்சர்கள்,பிரபல அரசியல்வாதிகள்,படைத்துறைப் பிரதானிகள்,காவல்துறைப் பிரதானிகள்,உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகின்ற பாதாள உலகத் தலைவர்கள் போன்ற பலரும்அடங்குவர்.
இக்கைது நடவடிக்கைகளின் மூலம் நாடு ஊழலுக்கு எதிராகத் துணிச்சலாக முன்னேறி வருகிறது என்ற ஒரு தோற்றத்தை அரசாங்கம் கட்டி எழுப்பி வருகிறது.இதுவும் ஐநாவில் அரசாங்கம் காட்டக்கூடிய ஒரு வீட்டு வேலையாக இருக்கும்.
நாலாவதாக,அரசாங்கம் அதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடங்கியிருக்கிறது.இவ்வாறு தொடங்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் சர்வதேச விளையாட்டு மைதானம், வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவது, தெங்கு முக்கோணத் திட்டம், வவுனியா,மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தமை, யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தைத் திறந்தமை, மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம்கட்ட அபிவிருத்தியைத் தொடக்கி வைத்தமை,யாழ் பொதுசன நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தமை ….போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் அடங்கும். இந்த அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அரசாங்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பாரபட்சமின்றி உழைக்கிறது என்ற ஒரு தோற்றத்தை வெளியே காட்ட முடியும்.
அனுர ஜனாதிபதியாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் அவர் தமிழ் மக்களுக்குச் செய்தவற்றின் பட்டியல் ஒன்றை அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியும். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று சிந்திக்கின்ற ஒரு ராஜதந்திரச் சூழலில் அரசாங்கம் மேற்கண்டவாறு ஐநாவை நோக்கி ஒரு தொகுதி வீட்டு வேலைகளைச் செய்து வருகிறது.
இதுவரையிலுமான கைது நடவடிக்கைகளில் போர்க் குற்றங்கள் அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களோடு தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அநேகமாக இல்லை. ஒரு கடற்படை பிரதானி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஒரு கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடையது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகளில் நேரடியாகப் போர் குற்றங்கள் சம்பந்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
தவிர,ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையின்போது அவரை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்ற பொருள்பட அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சொன்னார். அதன் பொருள் என்னவென்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போர்க்காலத்தில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக அவர் அங்கம் வகித்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதாகும்.
ஆனால் ரணில் அண்மையில் கைது செய்யப்பட்டது அவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அல்ல. பொதுச் சொத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான்.
எனவே தொகுத்துப் பார்த்தால் இதுவரை கைது செய்யப்பட்ட 70க்கும் அதிகமானவர்களில் யாருமே போர்க் களத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
எனவே இப்பொழுது நடக்கும் கைது நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த ஊழல் கட்டமைப்புக்கு எதிரானவைகளாகத்தான் காணப்படுகின்றன. ஐநாவில் ஏற்கனவே இயங்கி வருகின்ற சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் கட்டமைப்பினால் இனங்காடப்பட்ட படைப்பிரதானிகளுக்கு எதிரானவைகள்கூட அல்ல.அவ்வாறு அடையாளம் காணப்பட்ட சில படைப் பிரதானிகளுக்கு எதிராக ஏற்கனவே கனடா,அமெரிக்கா,பிரித்தானியா போன்றன பயணத் தடைகளை விதித்து, நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி வருகிறது.
எனவே நாட்டில் தற்பொழுது இடம்பெறும் பெரும்பாலான கைது நடவடிக்கைகள் தமிழ் நோக்கு நிலையில் ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைகளின் பிரதான பகுதிக்குள் வரவில்லை.அதை ஒரு வீட்டு வேலையாக அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியாது.ஆனால் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு அவை அரசாங்கத்திற்கு உதவும்.
எனவே கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் திருப்பகரமான மாற்றங்களில் ஐநாவில் காட்டக்கூடிய மாற்றங்கள் ஒப்பீட்டளவில் குறைவுதான்.தமிழ் நோக்கு நிலையில் இருந்து உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கும்.
“அரசாங்கம் போர் வீரர்களை வேட்டையாடுகிறது” என்ற பொருள்பட நாமல் அண்மையில் எச்சரித்திருந்தார்.இந்த எச்சரிக்கையானது அரசாங்கம் அதன் கைது நடவடிக்கைகளில் எதுவரை போகலாம் என்பதை உணர்த்தும் நோக்கிலானது. எது எவ்வாறு இருப்பினும்,ஜெனிவா கூட்டத்தொடரில் இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பலவீனமாக இல்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தரப்பு?
இதுவரை நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவுக்கு போயிருக்கின்றன. ஒரு கடிதம், தமிழ் தேசிய பேரவையும் சிவில் சமூகங்களும் இணைத்து அனுப்பியது. இரண்டாவது கடிதம், தமிழரசுக் கட்சி அனுப்பியது. மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசியப் பேரவையின் கடிதத்தில் போதாமைகள் உண்டு என்று கூறி புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும் தாயகத்தில் உள்ள அவருடைய சிவில் சமூக நண்பர்களும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் உட்பட சில அரசியல்வாதிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு அனுப்பிய ஒரு கடிதம். நாலாவது கடிதம் பிரித்தானியத் தமிழர் பேரவை அனுப்பியது.
இப்படியாக நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவை நோக்கிப் போயிருக்கின்றன.அரசில்லாத சிறிய தேசிய இனமாகிய தமிழ் மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்படாமல் கட்சிக்கொரு கடிதம் சிவில் சமூகத்துக்கு ஒரு கடிதம் என்று “ஈகோ”க்களாகப் பிரிந்து போய் நிற்கிறார்கள்.
செம்மணி எதிர்பாராத புதிய வாய்ப்புகளைத் தமிழ் மக்களுக்குத் திறந்து விட்டுள்ளது.அதேசமயம் அரசாங்கத்திற்கு அது எதிர்பாராத ஒரு சோதனைக் களம்.ஆனால் அந்தச் சோதனைக் களத்தை அரசாங்கம் ஒருமுகமாக எதிர்கொள்கிறது அந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துகிறது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் செம்மணி திறந்து வைத்திருக்கும் புதிய வாய்ப்புகளைத் தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடர் நாளை தொடங்கும் பொழுது?
செம்மணிக்கு நீதி கேட்டும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் அனைத்துலக விசாரணையைக் கேட்டும் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றன. அது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறது. அதில் கட்சி பேதமின்றி தமிழரசுக் கட்சியும் உட்பட அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.அது வரவேற்கத்தக்க விடயம். ஐநா கூட்டத் தொடருக்கு சில கிழமைகளுக்கு முன்னராவது அப்படி ஒரு ஞானம் உதித்ததைப் பாராட்ட வேண்டும்.ஐநா கூட்டத் தொடர்களில் தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமான நிலைமைகள் அதிகமிருக்கும் ஒரு ராஜதந்திரச் சூழலில் தமிழ்த் தரப்பு அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதுதான் பலமானது பொருத்தமானது.

