முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் உயிரிழந்த 16 வயதான ஹிஷாலினியின் உடலை மீள் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்தில், வீட்டுப் பணியாளராக வேலைக்கமர்த்தப்பட்டு, தீக் காயங்களுக்குள்ளான நிலையில் குறித்த சிறுமி உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டது. சிறுமியின் சடலம் மீது ஏற்கனவே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைக்கு மேலதிகமாக இரண்டாவது பரிசோதனையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
இதன்படி பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலினியின் உடலம் இன்று பாதுகாப்பாக தோண்டி எடுக்கப்பட்டு, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதேவேளை மீள பிரேத பரிசோதனகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய வைத்திய நிபுணர்கள் குழாம் முன்னிலையில் உடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.