மட்டக்களப்பில் அமைந்துள்ள மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரதன தேரர், அம்பாறை மாவட்டத்தின் உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், அவரது இரண்டு சிறிய பிள்ளைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதனை கண்டித்த சுமண ரதன தேரர், உஹன பொலிஸ் நிலையத்தில் சென்று குரல் கொட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதன் போது, பொலிஸ் நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோப் பதிவு மற்றும் அத்தாட்சிகளின் அடிப்படையில், சுமண ரதன தேரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், இன்று அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேரருக்கு எதிராக அவதூறு, பொது அமைதிக்கேடாக நடந்து கொள்வது மற்றும் பொலிஸ் கடமையை தடுக்கும் செயல்கள் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், அடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் தொடரவுள்ளன.

