மின்சார கட்டண உயர்வுக்குப் பிறகு, நீர்க்கட்டணத்தை மேலும் அதிகரித்து மக்கள்மீது நிதிசுமையை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், “மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதாக அரசாங்கம் முன்பு உறுதியளித்தது. ஆனால் தற்போது, 18.3 சதவீதத்தால் அதனை உயர்த்த இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.
இதனுடன், மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து, நீர்க்கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இது நடைமுறையில் அமுலாக்கப்படுமாயின், ஏற்கனவே பொருளாதார சுமையால் நெகிழ்ந்திருக்கும் மக்களுக்கு இன்னும் அதிகமான சிரமம் ஏற்படும் என சஜித் எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் சமூகநீதிக்கும், மக்களுக்கான அடிப்படை சேவைகளுக்குமான அணுகலுக்கும் எதிரானவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நீர்க்கட்டண உயர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டினையும், எதிர்கட்சியின் எதிர்ப்பையும் வௌியிடும் விவாதம் நாடளாவிய ரீதியில் தொடரும் அபாயம் உள்ளது.