நாட்டில் தற்போது நிலவி வரும் உப்பு தட்டுப்பாடு, பேக்கரி தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில், “உப்பு தொடர்பாக இப்போது பெரிய பிரச்சினை உருவாகியுள்ளது. குறிப்பாக, பேக்கரி உற்பத்தியில் பரவலாக பயன்படுத்தப்படும் உப்பு தூளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என கூறினார்.
“இந்த பிரச்சினையை நாங்கள் நேரடியாக அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். அமைச்சர் தேவையான உப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி வழங்கியுள்ளார். தற்போது அதற்காக காத்திருக்கிறோம்,” என்றார் அவர்.
பேக்கரி தொழிலில், உப்பு கட்டிகள் அல்லாது, பெரும்பாலும் உப்பு தூள் (refined salt powder) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது பேக்கரி தயாரிப்புகளின் தரத்தையும், சுவையையும் நேரடியாக பாதிக்கும் ஒரு மூலப்பொருளாகும்.
“தற்போதைய தட்டுப்பாடு காரணமாக பல பேக்கரிகள் உற்பத்தியை குறைத்து வருகின்றன. சிலர் மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். இருப்பினும், இது ஒரு சீரான தீர்வாக இருக்க முடியாது,” என அவர் கவலையுடன் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அடுத்த வாரத்திற்குள் இந்த பிரச்சினை தீரும் என எதிர்பார்ப்பதாகவும், தொழில்துறையின் செயல்பாடுகள் வழமைக்குத் திரும்பும் என நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.