வருடத்தின் முதல் பெரிய பண்டிகையாக வருவது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையாகும். தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நகரங்களை விட கிராமங்களில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது உண்டு. ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள் வெகு சிறப்பாக, உற்சாகமாக கொண்டாடப்படும்.
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக ஆண்டுதோறும் தை முதல் திகதியில் கொண்டாடப்படுவது வழக்கம். உழவுத் தொழிலுக்கும், அதற்கு உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கும், காளை மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுவதே பொங்கல் பண்டிகையாகும்.
சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும் இந்த நாளை மகர சங்கராந்தி என்றும் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள். அதே போல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை, அறுவடை திருநாளாக வேறு வேறு பெயர்களின் கொண்டாடப்பட்டு வருகிறது.
தைப் பொங்கலை சூரிய பொங்கல் என்றும் குறிப்பிடுகிறோம். சூரிய பகவானின் கதகதப்பான தன்மை மற்றும் ஒளியை குறிக்கும் வகையிலேயே, தைப் பொங்கல் அன்று பால், வெல்லமும் பயன்படுத்தி பொங்கல் வைக்கப்படுகிறது.
அதே போல் விளைச்சல், வீட்டில் செல்வ வளம் ஆகியவை பொங்கி, பெருக வேண்டும் என்பதற்காகவும், மங்கல நிகழ்வுகளால் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதற்காக தான் தைப் பொங்கல் அன்று பொங்கல் பொங்கி வரும் போது குளவையிட்டும், சங்கநாதம் இசைத்தும் அன்பு பெருக வேண்டும் என்பதற்காக தான் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் பொங்கல் வைத்து, பரிசுகளை பரிமாறிக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு தைப் பொங்கல் ஜனவரி 14ம் திகதி செவ்வாய் கிழமை அமைந்துள்ளது. அன்றைய தினம் காலை 09.03 மணிக்கு தான் தை மாதம் பிறக்க உள்ளது. செவ்வாய் கிழமை என்பதால் அன்றைய தினம் பகல் 3 முதல் மாலை 04.30 வரை தான் ராகு காலம் உள்ளது.
அதே சமயம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை எம கண்ட நேரம் உள்ளது. அதனால் வீட்டில் பொங்கல் வைப்பவர்கள் காலை 07.30 முதல் 08.30 வரையிலான நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
அந்த சமயத்தில் பொங்கல் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் காலை 10.30 முதல் 11.30 வரையிலான நேரத்திலும் பொங்கல் வைத்து, வழிபடலாம்.