சனியை கண்டு அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள். ஆனால் அவரை கண்டு பயப்படுவதற்கு பதிலாக சனியின் அருளை பெறுவதற்கான வழிபாடுகள், பரிகாரங்கள் ஆகியவற்றை தொடர்ந்து செய்வதன் மூலம் சனி பகவான் தரும் கெட்ட பலன்களில் இருந்து தப்பிக்க முடியும். அவ்வாறு சனியிலிருந்து விடுபடுவதற்கு எவ்வாறான வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.
நவகிரகங்களில் ஒருவராக இருக்கும் சனி பகவானை கண்டு பயப்படாதவர்கள் இருக்க முடியாது. மற்ற கிரகங்களால் பிரச்சனை என்றாலும் கூட அமைதியாக இருக்கும் மக்கள், ஜாதகத்தில் சனியால் பாதிப்பு அல்லது ராசிக்கு சனியால் பாதிப்பு என்றதும் சனி பகவானின் கோவிலுக்கு சென்று வழிபட துவங்கி விடுவார்கள்.
சனி பகவானின் பிடியில் இருந்து தப்பித்து, அவரின் அருளை பெற்று, துன்பம் இல்லாமல் வாழ என்ன செய்ய வேண்டும் என தேடாதவர்களும், பரிகாரம் செய்யாதவர்களும் இருக்க முடியாது. அப்படி சனியின் பிடியில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து வரலாம்.
பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து, சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று முறை சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசி மாவை போட்டுக் கொண்டே சுற்றி வர வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக உணவாக சேமித்து வைத்து கொள்ளும். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள்.
இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால், 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி விடும்.
இதனால் அஷ்டமத்து சனியின் பாதிப்பு உள்ளவர்கள், தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள், சனி திசை நடப்பவர்கள், ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி என சனியின் எந்த நிலையால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது.
சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.
தொடர்ந்து சனி பகவான் வழிபாடு செய்வதும், காகத்திற்கு கருப்பு எள் கலந்த சாதம் வைப்பது, சனிக்கு விருப்பமான கருப்பு நிறம், இரும்பு போன்ற பொருட்களை தானமாக வழங்குவது நல்லது.