யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் நேற்று (17) பொது அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டபோது, காணி தொடர்பாகவும், மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பல கோரிக்கைகளை முன்வைத்து பலர் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான விவரங்களையும் கோரியுள்ளார்.
எனவே, வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள காணிகள் பெரும்பாலானவற்றை ஜனாதிபதி அனுர அரசாங்கம் விடுவிக்கும் என இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டார்